ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

என்ன மனுசன்டா நீ???...

(ஊடகத்தில் வெளிவந்த செய்தியை முழுதும் உண்மை என்று நம்பி, 
அதன் அடிப்படையில் இத்தலையங்கம் எழுதப்பட்டுள்ளது)

    தலைப்பைப் படித்தவுடனே, கோபமாய்/உணர்ச்சி பொங்க எழுதப்போகிறேன் என்பது புரிந்திருக்கும். ஆம், சில தினங்களுக்கு முன் நாளிதழில் வெளிவந்த "மனதைக் குலைக்கும்" ஓர் செய்தியைப் படித்து அதீத கோபத்துடன் எழுந்ததே இக்கேள்வி! ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான செய்தி காயப்படுத்தும்! சஞ்சலப்படுத்தும்! கோபமூட்டும்! என்னை, இச்செய்தி மிகவும் பாத்தித்தது. இம்மாதிரி செய்ய ஒரு மனிதனால் எப்படி முடிந்தது? அவனுக்கு "மனசாட்சி" என்பது துளியளவும் இல்லையா?? என ஆதங்கப்பட்டு; என்னுள் நானே கலந்தாலோசனை செய்த போது எழுந்த கேள்வி தான் "என்ன மனுசன்டா நீ???". இவ்விசயம் நான் இதற்கு முன் எழுதிய சில தலையங்கங்களுடன் தொடர்புடையதே! சரி, என்ன விசயமென்று சொல்கிறேன்; "மூன்று மாத பெண்" குழந்தையை அவள் தந்தையேக் கொடுமைப்படுத்தி, அதன் விளைவாய் அக்குழந்தை கொடூரமாய் கொல்லப்பட்டதை படித்ததும் இந்த எண்ணமும், கேள்வியும் தோன்றியது.

      இச்செயலை, எக்காரணம் கொண்டு விளக்கினாலும் நியாயப்படுத்த முடியாது! ஏனெனில், அவனை எவ்விதத்திலும்; மூன்று மாத வயதுடைய பெண் குழந்தை பாதித்திருக்க வாய்ப்பேயில்லை!அச்செய்தியைப் படிக்கும்போதே கண்கள் கலங்கிவிட்டன; முழுதாய் படிக்கவே இயலவில்லை; ஏதோ, என் மிக நெருங்கிய உறவுக்கு நேர்ந்ததாய் ஓர் வேதனை! பெருவலி! பெருங்கோபம்! அச்செய்தியை முழுமையாய் விவரிக்கப் போவதில்லை; அதை விவரிக்கும் மனவலிமை இல்லை. அக்குழந்தையைப் பெற்ற அந்த "சகோதரியின்" மனம் என்ன வேதனை அடைந்திருக்கும்?  பிறந்து, இறப்பது கொடுமை! இறந்து பிறப்பது ஓர் புதுக்கவிதையில் குறிப்பிட்டது போல் "மாகொடுமை". ஆனால், பிறந்து சரியாய் பார்க்கும் திறனை அல்லது கேட்கும் திறனை கூட பெறாத ஓர் சிசு அவள் தந்தையின் சித்திரவதைக்கு உள்ளாகிக் கொல்லப்படுவதை எப்படி விவரிக்க முடியும்? இதனை அந்த சகோதரி எப்படி கடந்து - மீண்டு வரப்போகிறார்?

        "ஏன் பெண் பிள்ளையை பெற்றாய்?" என அக்கயவன், அச்சகோதரியை அடித்தானாம்; எந்த பரிமாண வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கிறான் இன்னும்? இவனைப் போல் ஒரு சில கயவர்களால் தான், பெண்ணைப் பாதுகாக்க "இன்னமும்" கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. சமீபத்திய தலையங்கமான "இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?" என்பதில் குறிப்பிட்டவாறு, இந்த சட்டங்கள் தவறான முறையில் பயன்படுவது மறுப்பதற்கில்லை! ஆனால், இம்மாதிரி துயரம் கொ(ள்ளு/ல்லு)ம் சகோதரிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சாட்சி.  அவனைப் பெற்றெடுக்க ஓர் பெண் வேண்டும்! அவன் "உடல் திமிருக்கு" ஓர் பெண் வேண்டும்!! ஆனால், அவனுக்கு பெண் குழந்தை வேண்டாமாம்!? இவனை ஏன் "என்ன மனுசன்டா நீ???" என்று கோபப்பட்டு கேட்கக்கூடாது? அச்செய்தியின் வாசகர்கள் "பின்னூட்டம்" முழுதும் படித்தறிந்தேன். கிட்டத்திட்ட அணைத்து பின்னூட்டங்களும் அவனைத் "தூக்கில்" இடவேண்டும்...

         என்றே குறிப்பிட்டது! அச்செய்தியின் தொடர்ச்சியாய் வந்த செய்தியில், அச்சகோதரி கூட அதே கருத்தை தெரிவித்ததாய் அறிந்தேன். இத்தண்டனையை (அச்சகோதரி சம்மதத்துடன்) வேறு விதமாய் கொடுக்கவேண்டும் என எண்ணுகிறேன். தூக்கிலிட்டு விட்டால் - தூக்கிலடப்படும் அச்சில நிமிடத்துளிகளுக்கு மட்டுமே; வேதனையோ அல்லது அச்செயலைப் பற்றிய சிந்தனையோ  இருக்கும்! அவனை வாழ விடவேண்டும்; ஆனால், அவன் அனுதினமும் அந்த செயலின் வீரியத்தை உணரும் படி தண்டிக்க வேண்டும் என்பதே என் முடிவு! "மரண தண்டனை" என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் ஓர் காரணமாய் இருக்கக்கூடும். தண்டனை என்பது, ஒருவர் செய்யும் தவறை; அவரும்/அவர் போன்றோரும் உணரச் செய்யும் விதமாய் இருத்திடல் வேண்டும். முதலில், அவன் "மனநிலை" பாதிக்கப்பட்டவனா? என்பதைச் சரிபார்க்கவேண்டும்! ஏனெனில்; மனநிலை பாதிக்கப்பட்டவனைத் தண்டித்தால்,  அவனுக்குத் தண்டனையின் நோக்கம் புரியாது!

       அவ்வாறிருப்பின், முதலில் அவனை குணப்படுத்தி; குற்றத்தை உணரவைத்து பின் அவனை தண்டிக்கவேண்டும். குற்றம் செய்தவன், தண்டனையை உணராதபோது தண்டனையே பயனற்றதாகி விடும்!  என்னளவில், இக்கொடூரக் கொலை செய்தவன் "மரண தண்டனை" அனுபவிக்கக் கூடாது! மாறாய், அவனை தொடர்ச்சியாய் மரணத்தின் முந்தைய நிலை வரை துன்புறுத்தி; பின் உயிர்ப்பித்து, மீண்டும் அவனை மரணத்தின் எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும். அதாவது, அவன் மரணத்தை உணரவேண்டும்; ஆனால், மரணிக்கக் கூடாது! இது, மிகக் கொடிய தண்டனையென எண்ணக்கூடும்! ஆனால், இத்தகைய தண்டனைத் தவறு செய்தவர் மட்டுமல்ல - வேறெவரும் கூட அப்படியொரு தவறைச் செய்யத் துணியாத பயத்தை அளிக்கும்! மேலும், இந்த தண்டனையை எல்லோரும் பார்க்கும் படி கூட செய்யலாம். "இது மனித நேயமல்ல!" போன்ற பல வாதங்களை பலர் வைக்கக்கூடும். ஆனால், இவனைப் போல் தவறு செய்பவர்கள்...

         தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதைத் தடுக்க வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! இவ்வலைப்பதிவின் முதல் தலையங்கத்தில், மருத்துவர் ஒருவர் கருவிலிருந்த என் மகளின் காலை சோதனைச் செய்யத் தட்டியது  எந்த அளவிற்கு என்னைத் துயரப்படுத்தியது என எழுதி இருந்தேன். அந்த அளவிற்கு என் மகள் மேல் மட்டுமல்ல; எல்லோர் மீதும் எனக்கு உணர்ச்சி சார்ந்த பற்று உண்டு. அதனால் தான், நான் மேற்கூறிய அளவுக்குக் கொடிய தண்டனையை பரிந்துரைக்க செய்திருக்கிறேன்! இதில் தவறேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை; "பெண் சிசுக்கொலை" குறைந்து வருகிறது என சமீபத்திய தலையங்கத்தில் கூட குறிப்பிட்டிருந்தேன்; அது உண்மையும் கூட. இம்மாதிரியான கொடூரக் கொலைகள், சிசுக்கொலையை விட பன்மடங்கு அதீதமானது! "தொட்டிலை" ஆட்டிவிடுவது போல் குழந்தையைச் சுவற்றில் மோதுவான் என்று அந்த தாய் கூறியதைப் படித்த போது, என்னையே சுவற்றில் மோதியது போல் உணர்ந்தேன்.

         மேலும், அச்சகோதரியை அடித்து வரதட்சனை கொடுமை வேறு செய்திருக்கிறான். அவனின் தவறுகள்/ குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதும்; மேற்கூறிய வண்ணம் அவனை தண்டிக்கவேண்டும். நான் சொல்வதால், உடனே அவ்வாறு தண்டித்துவிட மாட்டார்கள் என்பது எனக்கு தெளிவாய் தெரியும். நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் சட்டங்களும்; அதையொத்தத் தண்டனைகளும் சமூகத்தின் பிரதிபலிப்பே! வரதட்சனைக் கொடுமை சட்டத்தை தவறாய் கையாள்வதைக் குறிப்பிட்டு, அதில் மாற்றம் வரவேண்டும் என்றது போல், இம்மாதிரியானக் கயவர்களை தண்டிக்கும் சட்டத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம். இத்தலையங்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டும்! அப்போது தான், இது பெருமளவில் பரவும்! மொழிபெயர்ப்பு, இதே உணர்வுகளை அளிக்குமா? என்பது சந்தேகமே. இருப்பினும், இந்ததண்டனையின் தன்மையைப் பரிமாற்றம் செய்வதற்காகவாது; அதை விரைவில் செய்யவேண்டும்!

அந்த பிஞ்சு குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்!!!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
{www.vizhiyappan.blogspot.com} 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக