வெள்ளி, மார்ச் 02, 2012

பெயரை எப்படி வைத்தல்/ எழுதுதல் வேண்டும்?...




     சமீபத்தில் ஓர் பள்ளியில் என் மகளின் முழுப்பெயரை அப்படியே எழுத தயக்கம் காட்டியது மட்டுமல்லாமல், பெயரில் மாற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளனர். என்னுடைய மகளின் முழு பெயர் என் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் விழியமுதினி வேனில் இளங்கோவன். என்னுடைய பெயர் இ. இளங்கோவன் என்று தான் என்னுடைய எல்லா சான்றிதழ்களிலும் இருக்கும். ஆனால், முதன் முதலில் நான் "பாஸ்போர்ட்" எடுத்த போது என்னுடைய பெயர் விவரித்து எழுதப்பட்டிருந்ததை அறிந்தேன். அதாவது, முதன்மை பெயர் - இளங்கோவன்; குடும்ப பெயர் - இளமுருகு - என்றிருந்தது. அதன் பின், இந்த நாட்டிலிருந்து வந்த அனைத்து ஆவணங்களிலும் என்னுடைய பெயர் "இளங்கோவன் இளமுருகு" என்று தானிருந்தது; இன்னமும் இருந்து கொண்டு வருகிறது. இது முதலில் எனக்கு குழப்பமாய் இருப்பினும், பின் எனக்கு அவ்வாறு எழுதும் முறை பிடித்திருந்தது. என்னுடைய பெயரை அப்படியே "இளங்கோவன் இளமுருகு" என்றே எழுத பழகினேன்; இப்போதும் அப்படியே எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த குழப்பம் வந்தவுடன், திருமணமாகி எனக்கு பிறக்கும் குழந்தைக்கு முழுப்பெயரரையும் பதிய வேண்டும் என்று எண்ணினேன்; அதுவும் என் மனைவியின் பெயரும் அதில் இடம் பெயரவேண்டும் என்று முடிவெடுத்தேன். இதற்கு சாதகமாய், என் மகளும் இங்கேயே பிறந்தாள்; இங்கே இருக்கும் "இந்திய தூதரகத்தில்" கூட முழுப்பெயரும் பதியவேண்டும் (அவ்வாறு மட்டுமே பதிவார்கள்) என்பதால், என் எண்ணம் எளிதில் நிறைவேறிவிட்டது.

         இப்போது, அந்த பெயரில் தான் பிரச்சனை என்று பள்ளிகள் கூறிவருகின்றன. என்னால், அவர்கள் கூறுமாறு எளிதில் ஏதோ ஒரு வகையில் அந்த பெயரை மாற்றிவிட முடியும்; என்னவள் கூட இதை மீண்டும், மீண்டும் கேட்டதால்  அந்த முடிவிற்கு வந்துவிட்டாள். ஆனால், என்னால் அப்படி ஒப்புக்கொள்ளமுடியவில்லை; ஏனெனில் அந்தபெயர் வைக்க நாங்கள் எத்தனை முயற்சிகள் எடுத்தோம் என்பது - மேற்குறிப்பிட்ட என் முதல் தலையங்கம் - படித்த உங்களுக்கும் தெரியும். முதலில் ஒரு பள்ளியில், பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு வரைமுறை உள்ளது; கணினியில், அதற்கு மேல் இருப்பின் பெயரை பதியமுடியாது; பிற்காலத்தில், சான்றிதழ்களில் பதிவது கடினமாய் இருக்கும் என்றனர். பின், கல்வித்துறையில் இது பற்றி என் "மருதந்தை" விளக்கம் கேட்டார்; இடைவெளி உட்பட "முப்பது" எழுத்துக்கள் வரை பதியலாம் என்றனர். என் மகளின் பெயர் - VIZHIYAMUDHINI VENIL ELANGOVAN - சரியாய் வரைமுறைக்குட்பட்ட எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளது என்று அறிந்து கொண்டோம். இங்கே எனக்கு எழும் கடுமையான கோபம் கலந்த கேள்வி, இந்தப்பெயரை தமிழில் "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்று எழுதினால் வெறும் பதினேழு எழுத்துக்கள் தான். தமிழை ஆட்சி மொழியை கொண்ட ஓர் மாநிலத்தில், பெயரை "ஆங்கிலத்தில்" எழுதி பழகி அந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விதிப்படுத்துதல் எங்கனம் நியாயமாகும்? பிறகெதற்கு, அனைத்து கட்சிகளும் தமிழ் வளர்ச்சி பற்றி முழக்கமிடுகின்றன??

       சரி, நம் நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் உள்ளதால் - ஒரு பொதுமொழியாய் "ஆங்கிலம்" உபயோகிக்கப்படுகிறது என்ற வாதம் வரலாம். உண்மைதான்! இல்லை எனவில்லை; அப்படியாயின், தமிழகம் மற்றும் புதுவை தவிர (என்னறிவில்) மற்ற அனைத்து மாநிலங்களும் பெயரை விவரித்து எழுதுவது மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை உடையது - என்று தான் பொதுவாய் உள்ளது. அப்படியாயின், அதே பொதுமை எண்ணத்தோடு இந்த மாநிலங்களிலும் பெயரை விவரித்து எழுதவேண்டியது தானே? இதில் ஏன் இந்த பிடிவாதம் அல்லது குழப்பம்?? நான் சென்ற முறை விடுப்பில் நம் நாட்டிற்கு சென்ற போது "ஆதார்" (AADHAAR) என்ற பெயரில் இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டு வருகின்ற "இந்தியாவின் ஒருமைப்பட்ட அடையாளம் தரும் துறை" என்ற பொருளில், அதாவது Unique Identification Authority of India (UIDAI) எனும் துறையில் பதிவு செய்தேன். என் மகளுக்கும் அந்த அடையாள அட்டைக்காய் பதிந்தோம். அதில், என் மகளின் பெயரை முழுமையாய் பதிந்தனர்; இது ஒருமைப்பட்ட அடையாளம் எனில், அது தான் மேற்கூறிய இரண்டு மாநிலங்களில் பள்ளி போன்ற இடங்களில் பதியப்படவேண்டும் அல்லாவா? பிறகு ஏன், இத்தனை தடைகள்? அதிலும், ஒரு பள்ளியில் கூறிய காரணம் - உண்மையில் - அபத்தமான காரணம்! எனக்கு அதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்பு வருகிறது; அவர்களால் வருகைப்பதிவேட்டில் இந்தப் பெயரை எழுதுவது சிரமமாய் இருக்குமாம்! அதற்காய் நான் விதிமுறைகளின் படி வைத்திருக்கும் என் மகளின் பெயரை மாற்ற வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

       இன்னுமொரு பள்ளியில், எதற்கு மூன்று பெயர்கள்? ஏதாவது ஒரு பெயரை குறைத்து விடுங்கள் என்றனராம்! மகளின் பெயர் மற்றும் தந்தையின் பெயர் போதும்; தாயின் பெயரை எதற்கு சேர்க்கிறீர்கள் என்றனராம்! என்னவள் கூட அவ்வாறு செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்; அவளால் மேலும், மேலும் இது பற்றி எவர் கூறுவதையும் கேட்க முடியவில்லை - எனவே, அந்த முடிவுக்கு வந்துவிட்டாள். ஆனால், என்னால் அப்படி எளிதில் ஒப்புக்கொள்ளமுடியவில்லை! என்ன தவறு என்றே தெரியாத போது, எதற்காய் மாற்றப்படவேண்டும்? 1990 - களின் இறுதியில் என்று நினைக்கிறேன். தமிழக அரசு, தாயின் பெயரை கண்டிப்பாய் ஒருவரின் பெயருடன் இணைக்கவேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது; எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது! என் நண்பர் ஒருவர் இப்போது எப்படி இணைப்பது - எப்படி எல்லா சான்றிதழ்களிலும் மாற்றுவது என்று மிகவும் கவலையுற்றார். எனினும், பல ஆணைகள் பின்பற்றப்படாதது போல், இந்த உத்திரவும் கைவிடப்பட்டது வேறு விசயம். எனவே, எப்படி பார்ப்பினும் என் மகள் பெயர் வரைமுறைகளைப் பின்பற்றி வைக்கப்பட்டதே; பின் எவ்வாறு,  பள்ளியில் அது தவறு என்று வாதிடப்படுகிறது. மேலும், சில மதங்களில் ஒருவருடைய பெயரிலேயே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கும்; அதன் பின் அவர்களுடைய தந்தை அல்லது குடும்ப பெயர் இருக்கும். என்னுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அம்மாதிரி பெர்யர்களைக் கொண்ட சில  மதங்களை (மற்றும் மற்ற மாநிலங்களையும்) சார்ந்த நண்பர்கள் படித்துள்ளனர். 

         நம் நாடு அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ நாடு என்பது பேச்சளவில் மட்டும் தானா? அம்மதத்தை சார்ந்த மாணாக்கர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் தானே?? அப்படியாயின், என் மகள் பெயரில் மட்டும் ஏன் இத்துனை வாக்குவாதங்கள்??? ஒரு வேலை, இந்த மதத்தை சார்ந்த மாணாக்கர்கள் இவ்விரு மாநிலங்களில் முதன்மை பெயர் மற்றும் தந்தை பெயரின் முதலெழுத்து (initial) மட்டும் தான் கொண்டிருக்கவேண்டும் என்ற எழுதப் படாத சட்டம் இருக்கிறதா? என்ன நடப்பினும், என் மகளின் பெயரை மாற்றக்கூடாது என்ற முடிவுடன் உள்ளேன்; அவ்வாறே என் மருதந்தையிடமும் கோரியிருக்கிறேன். அவரின் பாதுகாப்பில் தான் இப்போது என்னவளும், என் மகளும் இருக்கின்றனர். அவர் கண்டிப்பாய் அந்த மாதிரி சூழல் வராது என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இந்த முடிவை மாற்றாமல் போராடுவேனா? அல்லது ஓர் சராசரி தந்தை போல் - எதற்கு பிரச்சனை - என்று பணிந்து போவேனா?? என்பதற்கு காலம் தான் பதிலளிக்கவேண்டும். இதில் எது சரி என்று எண்ணி பின்பற்றுவது என்பதிலும் தெளிவில்லை. என்னைப் பொறுத்தவரை, என் மகளின் பெயர் அனைத்து விதிகளுக்கு உட்பட்டு தானிருக்கிறது. எனவே அதை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று உறுதியாய் நம்புகிறேன். எனவே அவளின் பெயர்... 

விழியமுதினி வேனில் இளங்கோவன்!!!

பின்குறிப்பு: என்னுடைய எண்ணத்தில் தவறு ஏதேனும் இருப்பின், தயைகூர்ந்து "பின்னூட்டம்" மூலம் தேர்விக்கவும். அல்லது, நீங்கள் இம்மாதிரி பிரச்சனைகளை சந்தித்திருப்பின் - அது தொடர்பான உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும். அது - கண்டிப்பாய் எனக்கு மட்டுமல்ல; என் மாதிரி நிலையிலிருக்கும் மற்ற அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக